பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலி, டிம் பெய்ன் ஆகியோருக்கு இடையே வார்த்தை மோதல்கள் பல்வேறு தரப்பிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. போட்டியின் பொழுது இவர்கள் இருவருக்கும் இரண்டு முறை இது போன்ற மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, இருவரையும் நடுவர்கள் எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து ஆஸி. முன்னாள் வீரர் மைக் ஹசி வர்ணனையில் பேசுகையில், ''கோலி கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறார். இதுபோன்ற செயலை இப்போது நான் விரும்பவில்லை'' என்றார். மேலும் கோலி தனது கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா, ''விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஒழுக்கக் கேடான விளையாட்டு வீரரும் கூட. கோலியின் அகந்தை மற்றும் மோசமான நடத்தைகள் அவரின் கிரிக்கெட் திறமையை மறைத்துவிடுகின்றன. மேலும் எனக்கு நாட்டை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன், இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று கோலி கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கிண்டல் செய்யும்விதமாகவே நஸ்ருதீன் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் நசீருதின் ஷாவின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.