இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் கண்ட தோல்வி மூலம் தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெரும் முனைப்போடு நேற்றைய போட்டியை எதிர்கொண்டது. முன்வரிசை வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆறாவது விக்கெட்டிற்கு இணைந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இணை 150 ரன்கள் சேர்க்க 50 ஓவரின் முடிவில் இந்திய அணி 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் முறையே 92 ரன்களும், 66 ரன்களும் குவித்தனர். இறுதிவரை பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியின் முடிவில் ரவீந்திர ஜடேஜா பேசுகையில், "தோனி ஒருவகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எந்த வீரர்களோடு பேட் செய்தாலும் அவர்களோடு களத்தில் நின்றுவிட்டு, பின் அதிரடியாக விளையாட ஆரம்பிப்பார். அவர் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். தோனியுடன் இணைந்து பலமுறை பேட்டிங்கும் செய்துள்ளேன். நாம் கடைசி வரை நிலைத்து நின்றால், இறுதி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்க்கலாம் என்று என்னிடம் கூறுவார். நேற்றைய போட்டியிலும் அதே சூழல் தான் நிலவியது. அதன்படி, நானும் ஹர்திக் பாண்டியாவும் பேசி போட்டியை கடைசி கட்டம் வரை எடுத்துச் செல்ல முடிவெடுத்தோம். மைதானத்தில் ஒரு பக்கம் பவுண்டரி தூரம் மிகக்குறைவு, அதுதான் எங்கள் திட்டம்" எனக் கூறினார்.