இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்க இருக்கிறார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். 2010ஆம் ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவர் தற்போதுதான் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். அதுவும் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் விரிதிமான் சஹாவின் இடத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்.
தொடர் பயிற்சி, தொடர் முயற்சி என எல்லாவற்றையும் பயன்படுத்தி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், தற்போது டெஸ்ட் அணிக்காக விளையாடுவதை எண்ணி பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மனம்திறந்துள்ள அவர், ‘நான் சரியாக விளையாடி இருக்கமாட்டேன். சரியான ஃபார்மில் இல்லை. அந்த சமயத்தில் தோனி என்ற மிகப்பெரிய வீரர் அணியில் இருந்தார். அவர் இடத்தைப் பிடிப்பது அத்தனை எளிய காரியமில்லை. தற்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கிறேன். ஒரு சாதாரண வீரருக்கு என் இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். தோனி ஸ்பெஷல் ஆனவர். அதற்காகவே அவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விட்டதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன்’ என உறுதியளித்துள்ளார்.