- தெ.சு.கவுதமன்
நேற்று (18.12.22) நிறைவடைந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதியாட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸியும், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவும் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். அவற்றின் தொகுப்புகளைப் பார்க்கலாம்.
எம்பாப்பே நேற்று ஹாட்ரிக் கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது ஹாட்ரிக்காக அது அமைந்தது. இதற்கு முன்னதாக 1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஜியோஃப் ஹாட்ரிக் அடித்திருந்தார். அதேபோல், மொத்தம் 9 கோல்களை அடித்து, எம்பாப்பே தங்க ஷூ விருதினைப் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதுவரை நடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில், முதல் 90 நிமிடங்களில் சமமான கோல்கள், உபரி நேரத்திலும் சமமான கோல்களென அடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதற்கு எம்பாப்பே தான் காரணமாக இருந்தார். அதேபோல், இவரது ஹாட்ரிக்கால் மட்டுமே ஆட்டம் சம நிலைக்கு வந்தது என்பதும் ஒரு சாதனையே. பெனால்ட்டி ஷூட்டிலும் எம்பாப்பே ஒரு கோலடித்ததன் மூலம், ஒரு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் 4 கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
நேற்றைய பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றது. உலகக்கோப்பை ஆட்டங்களில் 26வது ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அதிக உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார். 7 கோல்களை அடித்ததோடு, மூன்று கோல்களுக்கு உதவி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி தங்கப் பந்து விருது பெற்றார். உலகக்கோப்பை ஆட்டங்களில் ஏற்கெனவே 2014ஆம் ஆண்டிலும் இதேபோல் தங்கப்பந்து விருதினை மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்மூலம், இருமுறை தங்கப்பந்து விருதினை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
மெஸ்ஸியின் இன்னொரு புதுமையான சாதனை, உலகக்கோப்பை ஆட்டமொன்றில் கோலடித்ததோடு, கோலடிக்க உதவியது என்ற வகையில் 'இளம் மற்றும் முதிய வீரர்' என்ற இரட்டைச் சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டத்தில் இச்சாதனை படைத்தபோது அவரது வயது 18 ஆண்டுகள் 357 நாட்களாக இருந்தது. நடப்பு உலகக்கோப்பை ஆட்டத்தில் இதேபோல நெதர்லாந்துக்கு எதிராக சாதனை படைத்தபோது அவரது வயது 35 ஆண்டுகள் 168 நாட்கள்.
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் கோலடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். அதேபோல், இதுவரை கலந்துகொண்ட உலகக்கோப்பை போட்டிகளில் 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம், அதிக உலகக்கோப்பைப் போட்டிகளில் வென்றவர் என்ற சாதனையை, ஜெர்மனி வீரர் க்ளோஸ் உடன் பகிர்ந்துகொள்கிறார் மெஸ்ஸி. உலகக்கோப்பை ஆட்டங்களில் 11 மேன் ஆப் தி மேட்ச் விருதுகளைப் பெற்றதில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி.