"கோடி ஆண்டுகள் ஆடினாலும் கூட நான் மரடோனாவின் அருகில் கூட வரமாட்டேன். அதை நான் விரும்பவுமில்லை. எல்லாக் காலகட்டத்திலும் தலைசிறந்த வீரர் அவர்தான்" இன்றைய கால்பந்து உலகின் துருவ நட்சத்திரம் மெஸ்ஸி, மரடோனாவுக்குச் சூட்டிய புகழாரம் இது. உலகின் தலைசிறந்த வீரர்கள் 10 என்ற ஜெர்சி நம்பரை தேர்வு செய்கிறார்களா? இல்லை அந்த எண், இவர்களைத் தேர்வு செய்கிறதா என்னும் சந்தேகம் எழும் அளவிற்கு, கிரிக்கெட்டில் சச்சின், கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி என பலர் 10 ஆம் எண் ஜெர்சியை அணிந்து ஆடியிருக்கிறார்கள். அந்த 10 ஆம் நம்பர் ஜெர்சியை முதன்முதலில் ரசிகர்களின் மனதில் விதைத்தவர் ‘எல் 10’ மரடோனா.
அர்ஜென்டினா நாட்டின் பெரிய கால்பந்தாட்ட லீக், அர்ஜென்டின் ப்ரைமேரா. அந்த அமைப்பின், ஜூனியர் அணியான அர்ஜென்டினோஸ் ஜூனியர்ஸ் அணியில், 16 வயதைத் தொடும் நேரத்திலேயே இடம்பெற்றார் மரடோனா. அதன் மூலம், அர்ஜென்டின் ப்ரைமேரா லீக்கில், மிக இளம் வயதிலேயே இடம்பெற்ற வீரர் இவர்தான். தனது ஜூனியர் அணிக்காக முதல் ஆட்டம். தன்னை விடச் சிறுவயது பையன்தானே என நினைத்து மரடோனாவிடமிருந்து, பந்தைப் பறிக்க வருகிறார் கேப்ரேரே என்ற வீரர். துளியும் அசரவில்லை மரடோனா. அந்த வீரரின் கால்களுக்கிடையே பந்தை உதைத்துக் கடத்திச் செல்கிறார். அன்றே அனைவரது பார்வையையும் தன் பக்கம் கடத்திக் கொண்டுவந்துவிட்டார் மரடோனா. பிறகு அர்ஜென்டினோஸ் ஜூனியர் அணிக்காக 167 ஆட்டங்களில் 115 கோல்களை அடித்தார். மரடோனாவின் அதிரடியைப் பார்த்த, ரிவர் பிளேட் கால்பந்தாட்ட அணி, தனக்காக ஆடுமாறும், தனது அணியில் ஆடும் வீரர்களை விட அதிக சம்பளம் தருவதாகவும் கூறியது. ஆனால் அதை மறுத்துவிட்டு, தான் ஆட விரும்பிய அணியான பாகோஸ் ஜூனியர்ஸ் அணியில் ஆடினார் மாரடோனா. அங்கேயும் கோல்களை தெறிக்கவிட்டார் மரடனோ.
1982 அர்ஜென்டினா அணிக்காக, தனது முதல் உலகக் கோப்பையில் பங்கேற்றார். ஆனால் அர்ஜென்டினா பெரிய அளவில் சாதிக்கவில்லை. விரைவில் வெளியேறியது. ஆனாலும் க்ளப் போட்டிகளில் தொடர்ந்து முத்திரையைப் பதித்தார் மாரடோனா. அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டின் கால்பந்தாட்ட க்ளப் அணியான பார்சிலோனா அணிக்கு மாறினார். மரடோனாவின் அதிரடியான கால்களின் உதவியோடு, பார்சிலோனா அணி, ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி கோபா டெல் ரே கோப்பையையும், அத்லெடிக் பில்போ அணியை வீழ்த்தி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையும் வென்றது. ஆனால், துரதிருஷ்டவசமாக மரடோனா பார்சிலோனா அணியில் இருந்து விலக நேரிட்டது. ஒரு இறுதிப் போட்டியில், அத்லெடிக் பில்போ அணி ரசிகர்கள், மரடோனாவின் தந்தையைக் குறித்து நிறவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஒரு வீரரும் ரசிகர்களோடு சேர்ந்து, நிறவெறி சைகையைக் காட்டினார். மேலும், பில்போ அணி வீரர் ஒருவர், மரடோனாவை இடித்துத் தள்ளினார். இதனால் அந்த அணி வீரர்களுக்கும் மரடோனாவிற்கும் வாக்குவாத்ம் உருவாகி, கைகலப்பில் முடிந்தது.
ஸ்பானிஷ் அரசர் அந்தப் போட்டியைப் பார்ப்பதை மறந்து, சண்டையில் ஈடுபட்டார் மரடோனா. அதன் காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பார்சிலோனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மரடோனாவை, நாபோலி என்ற இத்தாலியைச் சேர்ந்த அணி பெரும் தொகைக்கு வாங்கியது. மரடோனா, நாபோலி அணிக்கு ஆடுவதற்காக அந்த நகரத்திற்கு வரும்போது, 75,000 ரசிகர்கள் திரண்டு, தங்களது கால்பந்தாட்ட அணியைக் காப்பாற்ற வந்த காவலனாக அவரை கொண்டாடி வரவேற்றனர். அணியில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே 'கேப்டன்' பதவி அவரது தங்கக் கால்களை முத்தமிட்டது. அதுவரை, வடக்கு மற்றும் மத்திய நகரத்தைச் சேர்ந்த அணிகளே, இத்தாலி மற்றும் ஐரோப்பா கால்பந்து போட்டித் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தினர். அதை மாற்றிக்காட்டினார் மரடோனா. மரடோனா தலைமையில், 'சீரி ஏ' இத்தாலியன் சாம்பியன்ஷிப், கோபா இத்தாலி கோப்பை, ஐரோப்பா கால்பந்தாட்டச் சங்கம் நடத்தும் யூ.ஈ.எஃப்.ஏ கோப்பை என பல்வேறு கோப்பைகளை வென்றது. இந்த வெற்றிகளில் மரடோனாவின் பங்கு கேப்டனாக மட்டுமின்றி, ஒரு வீரராகவும் பெரும் அளவில் இருந்ததது. துவண்டிருந்த அணியை, மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற்றிக்காட்டினார் மரடோனா.
1986 கால்பந்தாட்ட உலகக் கோப்பை. அர்ஜென்டினாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று களம் காணுகிறார் மரடோனா. அர்ஜென்டினா அணி, காலிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியை அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அர்ஜென்டினா அணிக்காக அந்த இரண்டு கோல்களையும் அடித்தவர் மரடோனா. அவ்விரண்டு கோல்களும் இன்று வரை பேசப்படுகிறது. ஒன்று சர்ச்சையாக, இன்னொன்று சாதனையாக.
மரடோனா அடித்த முதல் கோல், அவர் கைகளில் பட்டுச் சென்றது. ஆனால், நடுவர் அதைக் கோல் என அறிவித்தார். அது சர்ச்சையாக மரடோனா, தன் தலையில் பாதியிலும், கடவுளின் கையில் சிறிது பட்டும் கோலுக்குச் சென்றது என்றார். அது, 'கடவுளின் கை' என்ற வரலாறாகி இன்றும் பேசப்படுகிறது. அவர் அடித்த இரண்டாவது கோல், நூற்றாண்டின் சிறந்த கோலாகக் கருதப்படுகிறது. 11 டச்சுக்களில், ஐந்து இங்கிலாந்து வீரர்களையும், பாதி களத்தையும் தாண்டி ஓடி, அந்த கோலை அடித்தார் மரடோனா. சர்வதேசக் கால்பந்தாட்டக் கூட்டமைப்பு நடத்திய வாக்கெடுப்பில், நூற்றாண்டின் சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து, அரையிறுதியில் இரண்டு கோல்கள், இறுதியில் வெற்றி கோலுக்கு அசிஸ்ட் செய்தது எனத் தனியொருவனாக, அர்ஜென்டினாவிற்கு உலகக்கோப்பையை வாங்கித் தந்தார் மரடோனா. அந்த உலகக் கோப்பையில், சிறந்த வீரருக்கான தங்கப் பந்தையும் வென்றார் அவர்.
மரடோனா இடது காலில் கோல் அடிப்பதில் வல்லவர். வலது காலால் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், பந்தை தனது இடது காலுக்கு மாற்றி கோல் அடிப்பதில் ஆர்வம் உள்ளவர். ஊக்கமருந்து, போதைப் பொருள் எனத் தனது கால்பந்தாட்ட வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டார் மரடோனா. கால்பந்தாட்டத்தில் இன்னொரு நட்சத்திரம் பீலே. பீலேவும், மரடோனாவும் சர்வதேசக் கால்பந்தாட்டக் கூட்டமைப்பால், 20 -ஆம் நூற்றாண்டின் சிறந்த வீராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பீலே, தனது பிரேசில் அணிக்கு மூன்று உலகக் கோப்பைகளை வாங்கித் தந்தார். ஆனால் மரடோனா, கால்பந்தாட்டத்தின் தலைசிறந்த வீரராகக் கொண்டாடப்படுகிறார். ரசிகர்கள் அவரை, 'கடவுள்' என அழைக்கின்றனர். ஏன்?
எரிக் கன்டோனா என்ற கால்பந்தாட்ட வீரர், அதற்கான பதிலை அளித்தார். "மரடோனா, அர்ஜென்டினாவை உலகக் கோப்பையை வெல்ல வைத்தார். அடுத்த உலககோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 1994 உலகக்கோப்பையில் அவர் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால், அந்த உலகக் கோப்பையை, தன் நாட்டிற்காக வென்றிருப்பார். மரடோனா இல்லாமல் அர்ஜென்டினா கோப்பையை வென்றிருக்காது. பீலே இல்லாமலும், பிரேசில் உலககோப்பைகளை வென்றிருக்கும். பீலேவைச் சுற்றி சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனால் மரடோனாவைச் சுற்றி யாருமில்லை" என்றார். அது உண்மையும் கூட.
புள்ளி விவரங்கள் சாதனைகளைச் சொல்லும் ஆனால் வீரர்கள் ஏற்படுத்திய தாக்கங்களைச் சொல்லாது. தாக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், மரடோனாவை கால்பந்தாட்டத்தின் கடவுளாக, ரசிகர்கள் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. மரடோனாவின் தங்கக் கால்கள் தற்போது ஓய்வு பெற்றுள்ளது. ஆனால், அவரின் கால்கள் செய்த அதிசயம் எப்போதும் கால்பந்தாட்ட உலகில் ஆச்சர்யமானதாகவே இருக்கும்.