கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடர் நேற்று (09.04.2021) தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ரோஹித் ஷர்மா 19 ரன்கள் எடுத்த நிலையில், ரன்-அவுட் ஆனார். இருப்பினும் கிறிஸ் லின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆதிரடியாக ஆடி, ரன் வேகத்தை உயர்த்தினர். இருப்பினும் கடைசி கட்டத்தில் மும்பை அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்ததால், 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியில், விராட் கோலி பொறுமையாக ஆட, மாக்ஸ்வெல் மற்றும் டீவில்லியர்ஸ் அதிரடியாக ஆடினர். கடைசி ஓவரில் டீவில்லியர்ஸ் ரன்-அவுட் ஆனாலும், கடைசி பந்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. ஆரஞ்சு தொப்பியை மும்பை வீரர் கிறிஸ் லின் கைப்பற்றினார்.
இந்தப்போட்டியில் சில புதிய சாதனைகளும் படைக்கப்பட்டன. ஹர்ஷல் படேல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் விராட் கோலி கேப்டனாக புதிய சாதனையை படைத்துள்ளார். அவர் நேற்றைய போட்டியில் 33 ரன்கள் எடுத்ததன் மூலம், இருபது ஓவர் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல்வீரர் என்ற பெருமையை விராட் பெற்றுள்ளார். இருபது ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில், விராட்டுக்கு பிறகு தோனி 5,872 ரன்களோடு இரண்டாமிடத்தில் உள்ளார். கம்பீர் 4,242 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.