இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் குருனல் பாண்டியாவின் 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 23 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். அந்த போட்டியில் குருனல் பாண்டியாவின் 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தனர் ஆஸ்திரேலிய அணியினர். இதில் 36 ரன்கள் மேக்ஸ்வெல் எடுத்த ரன்கள்.
சஹாலின் 4 ஓவருக்கு 64 ரன்கள், ஜோகிந்தர் ஷர்மாவின் 4 ஓவருக்கு 57 ரன்கள், ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக டி20-யில் இந்திய பந்து வீச்சாளரின் மோசமான பந்து வீச்சாக அமைந்தது குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவரின் பந்துவீச்சை மேக்ஸ்வெல் விளாசித்தள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கினர்.
.
இரண்டாவது போட்டியில் மேக்ஸ்வெலால் குருனல் பாண்டியாவின் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அவரின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார் மேக்ஸ்வெல். 3-வது போட்டியில் குருனல் பாண்டியாவின் 3 பந்துகளில் மேக்ஸ்வெலால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த போட்டியிலும் அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காத குருனல் பாண்டியா அடுத்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 5 விக்கெட்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் மட்டும் 4 விக்கெட்கள் எடுத்தார். இது டி20-யில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு ஸ்பின் பவுலரின் சிறந்த பந்து வீச்சாகும். இதன் மூலம் தன்னை விமர்சித்த விமர்சகர்களுக்கு அடுத்து வந்த இரண்டு போட்டிகளிலும் தக்க பதிலடி கொடுத்தார் குருனல் பாண்டியா.
மேக்ஸ்வெல் மட்டுமல்ல. உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்பட்ட ஏ பி டி வில்லியர்ஸ் கூட குருனல் பாண்டியாவின் பந்துவீச்சில் தொடர்ந்து அவுட் ஆகியுள்ளார். டி வில்லியர்ஸ் இதுவரை ஐ.பி.எல். போட்டிகளில் 4 முறை குருனல் பாண்டியாவின் பந்துவீச்சை சந்தித்துள்ளார். அந்த 4 முறையும் அவரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார். டி வில்லியர்ஸ்க்கு எதிராக குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு சராசரி 8 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்தியா கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்படுபவர் ஹர்திக் பாண்டியா. இவரின் மூத்த சகோதரர்தான் குருனல் பாண்டியா. இருவரும் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார் குருனால் பாண்டியா.
2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடினார். இதனால் 2018 ஐ.பி.எல். ஏலத்தில் 8.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளார் குருனல் பாண்டியா. 33 இன்னிங்க்ஸ் ஆடி 708 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 31, ஸ்ட்ரைக் ரேட் 154. 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 28 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பவுலிங் சராசரி 28, எக்னாமி ரேட் 7. இதில் 13 விக்கெட்கள் டாப் ஆர்டர், 11 விக்கெட்கள் மிடில் ஆர்டர் என்பது கவனிக்கத்தக்கது.
குருனல் பாண்டியாவை பொறுத்தவரை அணிக்கு பல வகைகளில் பலம் சேர்ப்பார். மிக சிறந்த பீல்டர். பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர். அதே சமயம் தேவைக்கு ஏற்ப, நிதானமாகவும் ஆடும் திறன் கொண்டவர். பவர்ப்ளே ஓவர்களிலும் பந்துவீசும் வல்லமை படைத்தவர். சஹால் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இந்திய அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் தான் தேவை. ஹர்திக் பாண்டியா வேகபந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். இந்த நிலையில் குருனல் பாண்டியா ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றால், அணியின் பலம் கூடும். இவர் இந்திய அணியில் இனிவரும் காலங்களில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.