16 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி குஜராத், சென்னை, லக்னோ, மும்பை என 4 அணிகள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக 60 ரன்களை அடித்த ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வென்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட்கள் இழப்பின்றி 85 ரன்களையும் அடுத்த 7 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 52 ரன்களையும் இறுதி 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 35 ரன்களையும் எடுத்தது. டெத் ஓவர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பதிரானா 16 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து சாஹல், மோஹித் சர்மா, ஹர்சல் படேல் தலா 11 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளனர். இறுதி 16 முதல் 20 ஓவர்களில் இதுவரை பதிரானா 26.2 ஓவர்களை வீசியுள்ளார். 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் 65 டாட் பந்துகளை வீசியதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் ஒரு தொடரில் 700 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த இந்தியர்கள் பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்தார். அவர் நடப்பு தொடரில் இதுவரை 705 ரன்களை எடுத்துள்ளார். 2016 தொடரில் 973 ரன்களை எடுத்து விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.