லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
ராகுல் காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் அறிவித்துள்ளார். ராகுலின் விலகலைத் தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளிலும் லக்னோ அணியின் கேப்டனாக குருணால் பாண்டியா செயல்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இந்தாண்டில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார். ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறாத நிலையில் தற்போது கே.எல்.ராகுலும் அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருப்பது அணிக்கு மிக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இல்லாததை ஈடு செய்யும் விதமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரஹானேவை போல் கே.எல்.ராகுல் வெளியேறியதை ஈடு செய்ய யார் அணியில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.