16 ஆவது ஐபிஎல் சீசனின் 12 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்களை குவித்து வெற்றி பெற உதவினார்.
தொடர்ந்து பேட்டியளித்த ரஹானே, “போட்டிக்கு சில நிமிடங்கள் முன்பு தான் அணியில் நான் இருக்கிறேன் என்பது தெரியும். மொயின் அலிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பயிற்சியாளர் ப்ளமிங் டாஸ் போடுவதற்கு முன் என்னிடம் அணியில் இருப்பதாக கூறினார். வான்கடே விளையாடியதை அனுபவித்து ஆடினேன். வான்கடே மைதானத்தில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. இம்மைதானத்தில் டெஸ்ட் விளையாட ஆசைப்படுகிறேன்.
ஐபிஎல் பெரிய தொடர் என்பதால் எப்பொழுது வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பது தெரியாது. முக்கியமான விஷயம் என்னவென்றால் மகேந்திர சிங் தோனி மற்றும் ப்ளமிங் அணியில் உள்ள வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்கள்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அணியின் பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு வந்துள்ளனர். முதல் முறையாக போட்டிகளில் விளையாடும் போது அது ஒரு வகையான அழுத்தத்தை கொடுக்கும். ஆனால் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய பின் அது புது வகையான அழுத்தத்தை கொடுக்கும்.
நானும் ரஹானேவும் தொடரின் ஆரம்பத்தில் பேசும் பொழுது நான் அவரிடம், அவருடைய திறனுக்கு ஏற்றவாறு விளையாடச் சொன்னேன். அழுத்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் உங்களுக்கு பின் நாங்கள் இருக்கிறோம், ஆதரவளிப்போம் என்றும் கூறினேன். அவர் மிகச்சிறப்பாக ஆடினார். அவர் அவுட் ஆன விதத்தில் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். அனைத்து போட்டிகளும் முக்கியம். புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது இப்போது முக்கியம் இல்லை” எனக் கூறினார்.