16 ஆவது ஐபிஎல் சீசனின் 24 ஆவது போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “ஐபிஎல் ஆட்டத்தின் தொடக்கத்தில் பனிப்பொழிவு இருக்கும். நீங்கள் அதை சமாளித்து சிறப்பாக ஆட்டத்தை தொடங்க வேண்டும். உங்கள் சிந்தனையில் என்ன இருந்தாலும் போட்டிக்கு தகுந்தாற் போல் அதனை மாற்ற வேண்டும். ஆனால் சிறப்பாக தொடங்குவதற்கு சற்று சிரமமாக இருந்தது. சிவம் துபே அதிரடியாக ஆடக்கூடியவர். அவர் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிக்கல் கொண்டவர் என்றாலும் சுழலுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர். துபே பயிற்சிக்கு வரும்போது காயத்துடன் தான் வந்தார். ஆனால் அவருக்காக சில திட்டங்களை வகுத்திருந்தோம். எனவே எங்களால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. எனினும் அவரால் மிடில் ஓவர்களில் அதிகளவு ரன்களை குவிக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். நாங்கள் நம்புவதை விட சிவம் துபே தன்னை நம்ப வேண்டும். அவர் திறமையானவர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் மைதானத்திற்குள் சென்றுவிட்டால் உங்கள் செயல்பாடுகள் உங்களால் அனைத்தும் உங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும்.
நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும். ஃபாஃப் மற்றும் மேக்சி தொடர்ந்திருந்தால், 18வது ஓவரில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். முடிவைப் பற்றி யோசிப்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் எப்போதும் கவனமாக ஈடுபட்டுள்ளேன். போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். இறுதி ஓவர்களில் பந்துவீசுவது நிச்சயமாக கடினமாக இருக்கும். இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும்போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.