வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி வென்று விட்ட நிலையில் டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ம் தேதி சாட்டோகிராமிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ம் தேதி மிர்புரிலும் நடைபெறுகிறது.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி இடம்பிடித்து இருந்தார். ஆனால் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்திற்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் சமிக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட் தேர்வாகியுள்ளார். 31 வயதான உனத்கட் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக இவர் 2010ல் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். சமீபத்தில் விஜய் ஹசாரே தொடரில் இவரது தலைமையிலான சவுராஸ்டிர அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்திற்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா அடுத்து நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவித்துள்ளது. மேலும் ஜடேஜாவும் காயம் காரணமாக வங்கதேசத்திற்கெதிரான தொடரில் இருந்து விலகியதால் அணியில் புதிதாக நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.