Skip to main content

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.