இரு கேப்டன்கள் என்ற நடைமுறை இந்திய அணிக்கு சரிவராது என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் ஷர்மா தலைமையில் மும்பை அணி கோப்பையைக் கைப்பற்றுவது இது ஐந்தாவது முறையாகும். இதனையடுத்து, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பானது ரோகித் ஷர்மாவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், ரோகித் ஷர்மாவை குறைந்தபட்சம் இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இதில் தன்னுடைய மாறுப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இரு கேப்டன்கள் என்ற நடைமுறை இந்திய அணிக்கு சரிவராது. ஒரு நிறுவனத்திற்கு இரு சிஇஓ-க்களை நியமிக்க முடியுமா? விராட் கோலி இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறார் என்றால் அவரே கேப்டனாகத் தொடரட்டும். பிற வீரர்களும் அந்த இடத்திற்கு வரவேண்டும் என்று நான் விரும்பினாலும், அது கடினமாக அமைந்துவிடும். இந்திய அணியில் 70 சதவிகித வீரர்கள் மூன்று தரப்பட்ட போட்டிகளிலும் விளையாடக் கூடியவர்கள். வேறுபட்ட பார்வை உடைய கேப்டன்கள் அமைவதை அவர்கள் விரும்பவில்லை. இது வீரர்களிடையே நிறைய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இரு கேப்டன்கள் அமைந்தால், இவர்தான் நமக்கு டெஸ்ட் அணிக்கான கேப்டன். இவரிடம் நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று வீரர்கள் நினைக்கலாம்" எனக் கூறினார்.