Skip to main content

சிஎஸ்கே தோல்வி, ஜடேஜா கேட்ச் விட்டாரா ?

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம். தோனியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர். சர்வதேச கிரிக்கெட் தரவரிசைகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர். சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலிலும் முதல் இடம் பிடித்தவர். இவரது பீல்டிங்கை சோதித்து பார்க்கவே முடியாது அவ்வளவு ஒரு தரமான பீல்டர். முப்பது யார்ட் சர்களில் நிற்கும் போது, பந்து பேயை போல பவுண்டரி லைனை கிழித்து விட்டு தொடுவதற்குள் பாய்ந்து பிடிக்கும் வல்லமை கொண்டவர். முப்பது யார்ட் கோட்டுக்குள்ளாக இருந்தாலும் சரி, பவுண்டரி லைனாக இருந்தாலும் பாய்ந்து கேட்ச் பிடித்து அசத்துவார். இவர் அப்படி கேட்சுகள் பிடித்ததால் இந்தியா வெற்றி கண்ட சம்பவமும் இருக்கிறது. பேட்டிங்கில் இவரது ஆட்டம் தேவைக்கேற்ப அதிரடியாகவும் இருந்தது, நிதானமாகவும் இருந்தது. இப்படி எதிலோ ஒன்று சொதப்பினாலும் மற்றோன்றில் கண்டிப்பாக அசத்துவார், அவர்தான் ரவீந்திர ஜடேஜா.  
 

ravindra jadeja

 

 


இந்திய சர்வதேச கிரிக்கெட்டில் நுழைய முடியாமல் தவிப்பவர்கள், எப்படியாவது ஐபிஎல்லில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடத்தை பிடித்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஜடேஜா அது மாதிரி இடத்தை பிடித்தவர் அல்ல, 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வந்தவர். இருந்தாலும் வெளியே தெரியாமல் இருந்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு வந்தார். அவருக்கு எந்த அணியின் கேப்டனும் கொடுக்காத வாய்ப்பை தோனி அளித்துக்கொண்டே இருந்தார். முதலில் அவரை ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளராகவே வெளிக்கொண்டுவர நினைத்தார் தோனி. ஐபிஎல்களில் சிறந்த பந்துவீச்சாளருக்கான பட்டியலில் இடம்பிடித்தார். பிறகு ஜடேஜாவின் தனிப்பட்ட உழைப்பால் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பின்னர் இந்திய அணியிலும் அதையே செய்தார்.

 

 

 

 

 

 

 

jadeja



இந்த வருடம் அவருக்கானது இல்லை போல, சிஎஸ்கே அணியில் அஷ்வினை தவிர்த்து இவரை ரீடெயின் செய்தனர். எல்லோரும் ஜடேஜாவை நம்பிக்கொண்டே இருந்தனர். ஆனால், அவருடைய பெர்பாமன்ஸ் ரொம்ப மோசமாக இருக்கிறது. டிரீம் லெவன்( dream 11) என்று சொல்லப்படும் விளையாட்டு ஆப்பில் யாரும் இவரை சேர்க்கக்கூட யோசிக்கிறார்கள் என்றால் பாருங்களேன். இதுவரை அவரை காப்பாற்றி வந்த பீல்டிங்கும் கடந்த சிஎஸ்கே போட்டியில் சென்னை அணியின்  தோல்விக்கு காரணமாக இருந்தது.

 


சுனில் நரேன் ஒரு அதிரடி ஆட்டக்காரர். அவரை முதலில் அவுட் செய்துவிட்டாலே சென்னை வென்றுவிடும் என்று கணித்தவர்களுக்கு ஏற்றார் போல், போட்டி ஆரம்பித்திலேயே கேட்ச் கொடுத்தார். அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை. அடுத்தடுத்த பந்துகளில் ஜடேஜா கையில் கேட்ச் கொடுத்தார். சாதாரண கேட்சை, தவறவிட்டு சென்னையை வெற்றி பாதைக்கு தடை போட்டார். இந்த ஐபிஎல்லில் ஒன்பது ஆட்டங்களில் 59 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். நிறைய ஆட்டங்களில் அவருக்கு மூன்றாவது டவுன் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதையும் அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பந்து வீச்சில் 7 இன்னிங்ஸில் சராசரியாக 8.55 ரன்களை வழங்கியிருக்கிறார். மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்திலேனும் பார்முக்கு வருவாரா இல்லை. நம்மையும், அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் தோனியையும் ஏமாற்ற போகிறாரா  ?