Skip to main content

இரண்டாவது டெஸ்ட்: காயம் காரணமாக மூன்று இந்திய வீரர்கள் நீக்கம்!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

team india

 

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இன்று (03.12.2021) தொடங்குகிறது.

 

இந்தநிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து மூன்று முக்கிய வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். இடது சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இஷாந்த் ஷர்மாவும், வலது கை காயம் காரணமாக ஜடேஜாவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

அதேபோல், அணியின் துணை கேப்டன் ரஹானே தசைப்பிடிப்பு காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மைதானம் ஈரமாக இருப்பதால் டாஸ் போடுவது தள்ளிப்போயுள்ளது. 10.30 மணியளவில் நடுவர்கள் மைதானத்தை ஆய்வுசெய்த பிறகே டாஸ் போடுவது குறித்து தீர்மானிக்கவுள்ளனர்.

 

இதற்கிடையே காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லாதம் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

பேஸ்பால் டெஸ்டை பேட்டிங்கால் தகர்த்து சரித்திரம் படைத்த இந்தியா

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
ind vs eng bazball test match update india gets a historical win

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும்,  சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக  சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனால் அடுத்து களமிறங்கிய கில் பொறுப்புடன் ஆட இந்திய அணியின் ஸ்கோர் 196-2 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.

தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கில் மற்றும் குல்தீப் சிறப்பாக ஆடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் ஆடக் களமிறங்கினார். சிறப்பாக நைட் வாட்ச்மேன் இன்னிங்ஸ் ஆடிய குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார். இந்த இணை அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பாக மற்றும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ் கான் இணை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கானும் அரைசதம் கடந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 430 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறத் தொடங்கியது. இந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் சுழற்றி அடிக்கப்பட்டனர். அந்த அணியின் டாப் 4 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.  கேப்டன் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெயிலெண்டரான மார்க் வுட் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எனும் பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2022இல் நியூசிலாந்துக்கு எதிராக 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது மோசமான தோல்வியாகும். இதற்கு முன் 1934 இல் ஆஸி.க்கு எதிராக 562 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மிகவும் மோசமான தோல்வியாகும்.

மேலும் இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அடித்த சிக்சர்கள் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.  அவர் அடித்த 12 சிக்சர்கள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் எனும் வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சீரிஸில் 48 சிக்சர்கள் அடிக்கப்பட்டதன் மூலம் ஒரு சீரிஸில் அதிக சிக்சர் அடித்த அணி எனும் தன் சாதனையை இந்திய அணி, தானே முறியடித்துள்ளது.

- வெ.அருண்குமார்

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.