2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29 ஆம் தேதி மும்பையில் தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற இருந்தது. இதற்காக ஏற்பாடுகள் அனைத்தும் முழு வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவி வருவதால் இந்த தொடரைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் பிசிசிஐ தரப்பில், தொடரைத் தள்ளிவைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளைப் பார்வையாளர்கள் இன்றி நடத்துமாறு ஐபில் நிர்வாகக்குழுவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவுறுத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஐபிஎல் போட்டியைத் தள்ளிவைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ, "கரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் 2020 தொடரை ஏப்ரல் 15 வரை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம். எங்கள் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களின் நலனில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம், மேலும் ரசிகர்கள் உட்பட ஐபிஎல் உடன் தொடர்புடைய அனைவருக்கும் பாதுகாப்பான மட்டைப்பந்து அனுபவம் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.