நேப்பியரில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய குப்தில் மற்றும் மன்றோ ஆகியோராது விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே அடுத்தடுத்து முகமது ஷமி வீழ்த்தினார். இதன் மூலம் வெறும் 56 ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார். நியூஸிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் இருந்தன. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
158 என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. 10 ஓவர்கள் முடிந்த நிலையில் வெயில் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதனையடுத்து டக்வர்த் முறைப்படி 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த வந்த கோலியும், தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 35 ஆவது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 156 என்ற வெற்றி இலக்கை எட்டியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் தவான் 75 ரன்னும், ராயுடு 13 ரன்னும் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.