இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று இருபது ஓவர் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரலாற்றுச் சிறப்புமிக்க 'பாக்சிங் டே' போட்டியாகும். 'பாக்சிங் டே' போட்டி என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் உலகின் பழமையான மைதானங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். 1950 முதல் இந்த போட்டியானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மெல்போர்ன் நகரில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்போட்டியை அடிலெய்டு மைதானத்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியும் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் பாக்சிங் டே போட்டி நடைபெறமால் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.