விராட் கோலி, ராஜீவ் சுக்லாவுடன் முகமது அக்ரம் சைஃபி (இடது)
கிரிக்கெட் அணியில் சேர விலைமாதுக்களை கூட்டி வரவேண்டும் என முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒருவரின் உதவியாளர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். சேர்மனாக இருப்பவர் ராஜீவ் சுக்லா. இவரது உதவியாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் முகமது அக்ரம் சைஃபி, உத்தரப்பிரதேசம் மாநில கிரிக்கெட் வாரியத்தில் எந்தப் பொறுப்புகளில் இல்லையென்றாலும், அதிக செல்வாக்கு உள்ளவர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் அணியில் மீண்டும் சேர்ந்து விளையாட வேண்டும் என கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா சைஃபியிடம் கோரியுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சைஃபி, ராகுல் சர்மாவிடம் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு விலைமாதுக்களை அழைத்துவருமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள் இந்தி ஊடகத்தில் வெளியாகின. அதில், ராகுல் சர்மா - சைஃபி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடளுக்கான ஆடியோ வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில், சைஃபி பெண்களைத் தயார் செய்து லாட்ஜிக்கு அனுப்பவேண்டும் என்றும், பணம் செலவாகும் என்றும் சொல்ல, அடுத்த ஆடியோவில் இன்னும் சில போட்டிகளுக்குப் பிறகு அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறுகிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சைஃபி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவில்லை எனக்கூறியுள்ள அவர், ராஜீவ் சுக்லா போன்ற பெரிய நபர்களுக்குக் கீழ் வேலைசெய்யும் என்னைப் போன்றவர்கள மீது தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் வருவது இயல்பு. இதில் 15 பேர் கொண்ட குழுவிற்கு தொடர்பு இருக்கிறது. 2015-ஆம் ஆண்டு நடந்ததாக சொல்லப்படும் இந்த சம்பவம் எதற்காக 2018-ல் வெளிவருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.