இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. நேற்று (24ம் தேதி), ஹோல்கர் ஸ்டேடியத்தில், இந்தூரில் நடைபெற்றது. இதில் டாசை வென்ற ஆஸி முதலில் பந்து வீச தீர்மானித்தது. குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்பியதால் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ்,கில் இணையில் ருதுராஜ் 8 ரன்களில் வெளியேற, இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த கில்,ஷ்ரேயாஸ் அதிரடியாக விளையாட ரன்கள் ஏறத் தொடங்கியது. இருவரும் சதம் அடித்தனர். அதில் சுப்மன் கில் 104 ரன்களுடனும் (4 சிக்ஸர், 6 பவுண்டரி), ஷ்ரேயாஸ் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்) என 105 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 52 ரன், இஷான் கிஷன் 31 ரன்கள் எடுத்தனர். க்ரீன் பந்தில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்க விட்ட சூர்யா இறுதிவரை களத்தில் நின்று 72 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 13 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்தியா 5 விட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்தது.
400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவில் ஷார்ட் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். 56/2 என்ற நிலையில் மழை பெய்யத் தொடங்கியதால், டி.எல்.எஸ் முறையில் ஆஸ்திரேலியாவுக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனால் 101 ரன்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து, வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பை தவறவிட்டு, 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரையும் இழந்தது. இறுதியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி பவுலிங்கில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை சதம் அடித்த ஸ்ரேயாஸ் பெற்றுக்கொண்டார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டம் , குஜராத்தில் வரும் 27 ஆம் தேதி சௌராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.