இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் செய்தியாளர்களிடம் பேசிய போது கிரிக்கெட் வீரர் பாண்ட்யா சிறந்த ஆல் ரவுண்டர் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். அவரை இயல்பாக விளையாட விடுங்கள். அவரிடம் நிறைய திறமை இருப்பதை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். அவர் என்னை விட சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆல்-ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஜொலிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை அவர் இப்போது பேட்டிங் ஆல்-ரவுண்டர் மட்டும் தான். முழுமையான ஆல்-ரவுண்டர் என்ற அந்தஸ்தை எட்டுவதற்கு அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பந்து வீச்சில் அவரால் முன்னேற்றம் காண முடியும் என்று நம்புகிறேன். அதே சமயம் அவர் அணிக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கிறார். அது தான் மிகவும் முக்கியமானது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்திருப்பது வருத்தத்திற்குரியது.
வீரர்கள் காயம் விஷயத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு பதிலாக வரும் இன்னொரு வீரர் அவரை விட நன்றாக ஆடலாம் என்று நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமே நல்லது என தெரிவித்தார். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பான்ட் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார். இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார். ஆனால் அவர் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.