ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி மற்றும் பாண்டிங் இருவரின் கேப்டன்சி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு ஹசி அளித்த பேட்டியில், தோனி, பாண்டிங் இருவருடைய கேப்டன்சி குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "ஒரு போட்டியின் போக்கைக் கணித்து அதற்கேற்றபடி வியூகங்கள் வகுப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர். நானே சில நேரம் யோசிப்பேன், தோனி செய்வது சரியா? என்று. ஆனால் அந்த முடிவு எப்போதும் சாதகமாகவே இருக்கும். அது என்னை ஆச்சரியமூட்டும். தோனி, பாண்டிங் இருவரது கேப்டன்சி பாணியும் வேறு வேறானது. ஆனால் அவை இரண்டும் சிறப்பானவை.
இந்தியா போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் ஒரு நாட்டின் கேப்டனாக இருப்பது மிகவும் கஷ்டம். ஆனால், நான் இதில் தோனியின் மிகப்பெரிய பலமாகக் கருதுவது, அந்தச் சுமையை சக வீரர்கள் மீது அவர் இறக்கி வைக்காததுதான். மிக முக்கியமாக இளம் வீரர்களை அவர் அழுத்தத்துக்கு உள்ளாக்க மாட்டார். மற்றவர்களிடம் அழுத்தத்தைத் திணிக்கவே மாட்டார். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. அதனை வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதுகிறார்கள். சில நேரங்களில் வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் வரும். இங்கு வெற்றி மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள், அதனால்தான் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது மிகவும் கடினம்" எனத் தெரிவித்துள்ளார்.