
மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவரான பல்பீர் சிங் இன்று உயிரிழந்தார்.
1956 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகச் செயல்பட்டு இந்திய அணிக்குத் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்த பல்பீர் சிங், கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாததால் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். கடந்த மே 18 முதல் அரை கோமா நிலையிலிருந்த பல்பீர் சிங்கிற்கு அதிக காய்ச்சலுடன் நிமோனியா ஏற்பட்டதோடு, மூளையில் இரத்த உறைவு, மூன்று முறை மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இன்று அவர் உடல்நிலை மோசமாகி இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இவரது மகன்கள் கனடாவில் வசித்துவரும் நிலையில், தனது மகளுடன் சண்டிகரில் வசித்து வந்தார் பல்பீர் சிங்.
96 வயதான பல்பீர் சிங், நவீன ஒலிம்பிக் வரலாற்றில் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு இந்தியர் ஆவார். அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஒரு நபர் அடித்த பெரும்பாலான கோல்களுக்கான உலக சாதனை இன்னும் இவர் வசமே உள்ளது. லண்டன் (1948), ஹெல்சிங்கி (1952) ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற இவர், மெல்பேர்ன் (1956) ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மீண்டும் இந்திய அணிக்குத் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த என்பது குறிப்பிடத்தக்கது.