ஹாட்-ட்ரிக் விக்கெட்டுக்கு முன் குல்தீப்பிற்கு தோனி சொன்ன அட்வைஸ்!
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்திய அணியின் வெற்றிக்குப் பின்னர் பேசிய குல்தீப், ஹாட்-ட்ரிக் விக்கெட் பந்தினை வீசுவதற்கு முன்னர் தோனியிடம் கருத்து கேட்டதாக கூறியுள்ளார்.
முதலில் மேத்தியூ வேட் மற்றும் அகர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர், தோனியிடம், மஹி அடுத்து எந்தமாதிரி பந்துவீசவேண்டும்? என குல்தீப் கேட்க, அதற்கு கீப்பர் தோனி ‘உனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே பந்துவீசு’ என கூறியுள்ளார். ஹாட்-ட்ரிக் பந்தில் பேட்டிங் செய்த பேட் கம்மின்ஸ் தோனியிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். மூத்தவீரர் ஒருவரின் இதுமாதிரியான அறிவுரை வளரும் வீரருக்கு நிச்சயம் உற்சாகமூட்டுவதாக இருக்கும் என குல்தீப் கூறியுள்ளார்.
இந்திய அணியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் குல்தீப் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு சேத்தன் சர்மாவும், 1991ஆம் ஆண்டு கபில்தேவும் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், ‘முதல் ஐந்து ஓவர்களில் என்னால் சரியாக பந்துவீச முடியவில்லை. அடுத்து வீசிய ஓவர் எனக்கானதாக அமைந்தது.. மிச்சமெல்லாம் வரலாறாக மாறிப்போனது’ என்கிறார். குல்தீப் யாதவ் 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் ஹாட்-ட்ரிக் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.