ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதற்கட்டமாக நடந்துவரும் ஒருநாள் தொடரில், தொடர்ச்சியாக இரு வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும், ஆறுதல் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியும் ஆயத்தமாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் சுமித் கடந்த இரு போட்டிகளிலும் சதமடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், ஸ்டீவ் சுமித் விக்கெட் குறித்து பேசுகையில், "ஸ்மித் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து ஸ்மித் பேட்டிங் செய்ய வரும்போது 7 முதல் 8 ஓவர்கள் வரை வீச வேண்டும். ஸ்மித் வேகப்பந்து வீச்சை விரும்பக்கூடியவர். சிறிது நேரத்திற்கு அவரை அதில் இருந்து விலக்கி வைத்திருந்தால் அதுவே அவர் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முக்கிய புள்ளியாக அமையும்" எனக் கூறினார்.