13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வழி நடத்தி வந்தார். நடப்பு தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகள், 4 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.
கடந்த உலகக் கோப்பை தொடரில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து, நடப்பு ஐ.பி.எல் தொடர் தொடங்கும் போதே, கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருப்பினும், தினேஷ் கார்த்திக்கே கேப்டன் பொறுப்பில் தொடர்ந்தார். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, அதை இயான் மோர்கனிடம் ஒப்படைத்துள்ளதாக அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் காம்பீர் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
"கிரிக்கெட் என்பது உறவை அடிப்படையாக வைத்தது அல்ல. இது களத்தில் செயல்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டது. நிறைய மாற்றங்கள் மோர்கனால் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தொடரின் நடுவில் யாராலும் பெரிய அளவில் மாற்றம் செய்துவிட முடியாது. கொல்கத்தா அணி, கேப்டனை மாற்ற வேண்டிய மோசமான நிலையில் இல்லை. ஆனால், இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது. உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் அணியில் இருக்கிறார் என்று பேசுவது, தினேஷ் கார்த்திக்கிற்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தும். இதற்கு நேரடியாகவே கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் வழங்கியிருக்கலாம்". இவ்வாறு கவுதம் காம்பீர் கூறினார்.