Skip to main content

தோனி, ரோகித்தோடு ஒப்பிட்டு விராட் கோலியை விளாசிய கம்பீர்!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

gautam gambhir

 

 

தோனி மற்றும் ரோகித் ஷர்மாவோடு ஒப்பிட்டு விராட் கோலியின் அணித்தலைமை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் அணித்தலைமை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "அணிக்காக ஒரு கோப்பையை கூட வென்றுகொடுக்காமல், 8 வருடங்களாக கேப்டனாக தொடர்வது என்பது அதிகம். இதற்கான பொறுப்பை அணி கேப்டன்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு ஏதாவது அணியில் இத்தனையாண்டு காலம், யாராவது கேப்டனாக நீடிக்கிறாரா? உதாரணத்திற்கு அஷ்வினை எடுத்துக் கொள்ளுங்கள். இரு வருடம் கேப்டனாக செயல்பட்டார். கோப்பை வெல்ல முடியவில்லை என்றவுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தோனி, ரோகித் ஷர்மா குறித்து பேசும் நாம், விராட் கோலி குறித்து பேசுவதே இல்லை. தோனி 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோகித் நான்கு முறை வென்று கொடுத்துள்ளார். அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் கேப்டனாக தொடர்கின்றனர். ரோகித் ஷர்மாவும் கோப்பையை இத்தனையாண்டு காலம் வென்று கொடுக்காமல் இருந்திருந்தால், அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. நீங்கள்தான் அணியின் கேப்டன், வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டை எடுத்துக்கொள்ளும் போது தோல்வியின் போது கிடைக்கும் விமர்சனத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.