1999 முதல் 2001 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் மார்ட்டின் ஜேக்கப். கங்குலி மற்றும் சச்சின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டரில் விளையாடிய வீரர் இவர். 2001 ல் ரஞ்சி கோப்பையை பரோடா அணி வெல்லவும் காரணமாக இருந்தார். கடந்த மாதம் இவருக்கு ஏற்பட்ட கார் விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உயிருக்கு போராடிவரும் இவரின் சிகிச்சைக்கு பணமில்லாமல் இவரது குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறது. இவரது மனைவி பிசிசிஐ யிடம் கேட்டுக்கொண்டதையடுத்து பிசிசிஐ சார்பில் 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் 3 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த பணமும் தீர்ந்துபோக மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்து வந்துள்ளது அவரின் குடும்பம். ஊடகங்கள் மூலம் இதனை அறிய வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவரது மருத்துவ செலவுகள் முழுவதையும் ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'நானும் மார்டினும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை எனக்கு நன்கு தெரியும், மிகவும் நல்ல மனதுடையவர். மார்டின் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மார்டின் குடும்பத்தார் தனியாக இல்லை அவர்களுக்கு உதவ நான் இருக்கிறேன், மருத்துவச் செலவை ஏற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.