கடந்த நான்கரை மாதங்களில் மட்டும் தான் 22 முறை கரோனா பரிசோதனை செய்து கொண்டதாக பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் நடந்து முடிந்த 13-ஆவது ஐபிஎல் தொடரையடுத்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர், இங்கிலாந்து அணி இந்தியாவில் செய்யவுள்ள சுற்றுப்பயணம், 14-ஆவது ஐபிஎல் தொடர் குறித்தான வேலைகளில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.
பிசிசிஐ தலைவரான கங்குலி காணொளி வாயிலாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இதில் ஒரு முறை கூட தொற்று உறுதி செய்யயப்படவில்லை. என்னைச் சுற்றி கரோனா தாக்கத்திற்கு உள்ளானவர்கள் இருந்ததால் அடிக்கடி பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தது. 14-வது சீசன்போட்டி இந்தியாவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 400 பேர் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கோடு கடந்த இரண்டரை மாதத்தில் மட்டும் 30 முதல் 40 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்துள்ளனர். அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள். அடுத்தவருட தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது" எனக் கூறினார்.
மேலும் பேசிய கங்குலி, மும்பை, டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.