பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறிய சர்ச்சை கருத்துக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து 'தி கேம்சேஞ்சர்' எனும் புத்தகம் எழுதி வெளியிட்டார்.
அதில் இந்தியாவின் கம்பீர் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். அந்த புத்தகத்தில் "கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது. எந்தவிதமான ஆளுமைத் திறனும் இல்லாத கம்பீர் கிரிக்கெட்டில் ஒரு சாதாரண வீரர். எந்தவிதமான ரெக்கார்டும், குறிப்பிட்ட சாதனையும் அவருக்குக் கிடையாது. ஆனால், திமிருடன் நடந்து கொள்வார். கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் கலவையில் உருவாகியவன் என்ற நினைப்போடுதான் கம்பீரின் செயல்பாடு இருக்கும். கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை போட்டியில்நானும் கம்பீரும் மோதிக்கொண்டது நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டியில் கம்பீர் முதல் ரன்னை ஓடிவிட்டு, 2-வது ரன்னுக்கு என்னை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டோம்" என தெரிவித்திருந்தார்.
தற்போது இதற்கு பதிலளித்துள்ள கம்பீர், "ஷாகித் அப்ரிடி. நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்தியாவுக்கு வாருங்கள், தனிப்பட்ட முறையில் நானே உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.