- தெ.சு.கவுதமன்
பொதுவாக கிராபிக்ஸில் மிரட்டக்கூடிய ஆங்கிலத் திரைப்படங்கள் தொடக்கத்தில், "சீக்கிரம் படத்தப் போடுங்கபா!" என்று சொல்லும்படி இழுவையாகச் சென்று, இடைவேளை நெருங்கும்போது பரபரப்பு தொடங்கி, க்ளைமாக்ஸ் வரும்போது அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தும்படி விறுவிறுப்பாகச் செல்லும். அதே போன்ற உணர்வை நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் கொடுத்தது.
தொடக்கத்தில் முழுக்க முழுக்க அர்ஜென்டினாவே ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணி வீரர்கள், பந்தை பாஸ் செய்வதில் நிறைய சொதப்பினார்கள். மெஸ்ஸியின் படையினர், ஆட்டத்தைத் தங்கள் கால்களிடையே நகர்த்தியபடி கொண்டுசென்றனர். அதன் பலனாக முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கான வாய்ப்பை எளிதாக்கினார்கள். இரண்டாம் பாதியின் தொடக்கமும்கூட அர்ஜென்டினாவின் ஆதிக்கமாகவே அமைந்தது. நேரம் செல்லச்செல்ல... 70வது நிமிடத்தை நெருங்கும்போது பிரான்ஸ் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தைக் காட்டத் தொடங்கினார்கள். இன்னும் 20 நிமிடங்களில் 2 கோல்களையாவது அடித்தால்தான் சமன் செய்ய முடியுமென்ற இக்கட்டான சூழலில், எம்பாப்பே தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். அதன் பலனாக, 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்து 2 - 1 என்ற நிலைக்குக் கொண்டுவந்தார். எனினும் அது போதாதே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே 81வது நிமிடத்தில்... துல்லியமாகச் சொல்வதானால் 97 விநாடிகளில் அடுத்ததொரு அற்புதமாக கோலை எம்பாப்பே அடித்தார். ஆட்டம் சமமானது.
ஆம்... வெறும் 97 விநாடிகளில் ஆட்டமே மாறிப்போய் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமே ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த நிலை மாறி, பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆடத் தொடங்கினார்கள். அதையடுத்து எம்பாப்பேவைச் சுற்றியே ஆட்டம் அமைந்தது. அவரது கால்களுக்கிடையே பந்து சிக்கினாலே அர்ஜென்டினா வீரர்கள் பதட்டமானார்கள். இப்படியாக 2 - 2 என முடிய, உபரி நேரம் வழங்கப்பட்டது. இதில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்க முடியவில்லை. சில முயற்சிகள் கோல் கீப்பர்களால் தடுக்கப்பட்டன. உபரி நேரத்தின் இரண்டாம் பாதியில், மீண்டும் அர்ஜென்டினா சுதாரித்துக்கொள்ள, அருமையானதொரு கோலை மெஸ்ஸி அடித்தார். அர்ஜென்டினா 3 - 2 என முன்னிலை பெற்றது! அப்போது ஆஃப் சைடாக இருக்குமோவெனச் சரிபார்த்ததில், ஆஃப் சைட் இல்லையென்பது தெரிய, கோல் உறுதியானது.
அடுத்து எம்பாப்பே புயல் வீசத்தொடங்க, அவரிடம் பந்து போனாலே அதைத் தடுக்க அர்ஜென்டினா வீரர்கள் பதட்டமாக... தவறு செய்ய... பிரான்ஸ்க்கு பெனால்ட்டி வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. இம்முறை எம்பாப்பே தனது ஹாட்ரிக் கோலை அடித்தார்! ஆக, உபரி நேரத்திலும் ஆளுக்கு ஒரு கோல் என்று சமமான நிலைக்கு வந்தனர்! இந்த கோல் அவரை சாதனையாளராக மாற்றியது! உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது ஹாட்ரிக்காக இது அமைந்தது. இதற்கு முன்னதாக 1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக ஜியோஃப் ஹர்ஸ்ட் அடித்திருந்தார். அதேபோல், தங்க ஷூ விருதினைப் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதுவரை நடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில், முதல் 90 நிமிடங்களில் சமமான கோல்கள், உபரி நேரத்திலும் சமமான கோல்களென அடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதற்கு எம்பாப்பே தான் காரணமாக இருந்தார். அதேபோல், இவரது ஹாட்ரிக்கால் மட்டுமே ஆட்டம் சம நிலைக்கு வந்தது என்பதும் ஒரு சாதனையே.
இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியினர், அடுத்துவந்த பெனால்ட்டி ஷூட் அவுட்டில், எம்பாப்பேக்கு அடுத்துவந்த வீரர்கள் சொதப்பியதன் காரணமாக, பிரான்ஸ் தோல்வியைத் தழுவியது. பெனால்ட்டி ஷூட்டிலும் எம்பாப்பே ஒரு கோலடித்ததன் மூலம், ஒரு உலகக்கோப்பை இறுதியாட்டத்தில், 4 கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்! மொத்தத்தில், "இறுதியாட்டம்னா இப்படித்தாய்யா இருக்கணும்!" என்று சொல்வதற்கேற்ற க்ளைமாக்ஸ் காட்சிகளுடன், மெஸ்ஸி Vs எம்பாப்பே அணியின் மோதல் விறுவிறுப்பாக அமைந்தது. அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.