உலகக் கோப்பையின் 13வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் 80 ரன்களும், அலிகில் (58) ரன்களும் முஜீப்பின் 28 ரன்களும் கை கொடுக்க, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.
பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீச தேர்ந்தெடுத்ததே அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுவான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதைக் கணக்கில் கொள்ளாமல், முதலில் பந்துவீச தேர்ந்தெடுத்தது இங்கிலாந்தின் தவறான முடிவாகிவிட்டது. இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்குத் தடுமாறுவார்கள் என்று தெரிந்தும், முதலில் பந்து வீசத் தீர்மானித்தது தவறான முடிவாகிவிட்டது என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து எப்படி சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ்-ல் அவர் பதிவிட்டுள்ளதாவது, "தரமான சுழற்பந்து வீச்சாளர்களை நீங்கள் எதிர்கொள்ளும் போது, அவர்களின் கைகளைப் பார்த்து பந்தை கணிக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து வீரர்களோ அதற்கு மாற்றாக பந்து பிச்சாகி சுழலும் இடத்தை வைத்து கணித்தது தான் அவர்கள் செய்த தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.