இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை ஆட்டத்தின் இடையில் திடீரென ரசிகர் ஒருவர் ஸ்டேடியத்தினுள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.
இந்திய அணியினர் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் வந்துகொண்டிருந்தனர். அப்போது போட்டியைக் காண வந்திருந்த இந்திய அணியின் ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் விரைந்துள்ளார். அவர் நேராக விராத் கோலியை நோக்கி சென்றபொழுது, பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார். பின்னர், இது பற்றி அந்த ரசிகரிடம் விசாரிக்கையில், அவர் இங்கிலாந்தில் வசிக்கும் டேனியல் ஜார்விஸ் என்பது தெரியவந்தது. ஆட்டம் நடைபெறும் போது அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார் என்பதால் ஐ.சி.சி, ஜார்வோ மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், அவர் இனிவரும் உலகக்கோப்பை 2023 ஆட்டங்களை நேரில் சென்று காண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், “போட்டி நடைபெறும் போது பாதுகாப்பு அளிப்பதும், இதுமாதிரி சம்பவங்கள் மறுபடியும் வராமல் தடுக்கவும் பரிசீலிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை இந்திய அதிகாரிகளும் தங்கள் சார்பில் விசாரிக்கவுள்ளனர் என்றும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, ஜார்வோ இங்கிலாந்திலும் இது போன்று 3 தடவை வெவ்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இடையூறு செய்துள்ளார். இதன் காரணமாக, அங்கும் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.