Skip to main content

இங்கிலாந்தின் வெற்றியால் மேலும் சுவாரசியமான அரையிறுதி!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

England beat the Netherlands world cup score semi final update

 

உலகக் கோப்பையின் 40 ஆவது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இன்று (08.11.23) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இம்முறையும் பேர்ஸ்டோ 15 ரன் எடுத்து வெளியேறி ஏமாற்றினார். அடுத்து வந்த ரூட்டும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த மாலன், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர்.

 

அரைசதம் கடந்த மாலன், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 ரன்களில், ரன் அவுட் ஆனார். ஹேரி ப்ரூக் 11 ரன்களுக்கு நடையைக் கட்ட, அடுத்து வந்த கேப்டன் பட்லர் 5 ரன்னில் வெளியேறினார். மொயீன் அலி 4 ரன்னில் ஆட்டமிழக்க 192-6 என்று தடுமாறியது. பின்னர் இணந்த ஸ்டோக்ஸ் - வோக்ஸ் இணை அணியை நிலை பெறச் செய்தது. வோக்ஸ் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் சதம் கடந்து 108 ரன்களுக்கு அவுட் ஆனார்.  இறுதியில் 49.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி சார்பில் லீடே 3 விக்கெட்டுகள், வேன் பீக் 2 விக்கெட்டுகள், ஆர்யன் 2 விக்கெட்டுகள், மீகெரென் ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஆக்கர் மேனும் டக் அவுட் ஆனார். பின்னர் பர்ரேசி  நிதானமாக விளையாடி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைப்ரண்ட் 33, கேப்டன் எட்வர்ஸ் 38, தேஜா 41 ரன்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி, அடில் ராஷித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த போட்டியில் தோற்றதன் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதன் மூலம் 4 ஆவதாக எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதில் இங்கிலாந்து வென்றால், பாகிஸ்தானையும் சேர்த்து வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

- வெ.அருண்குமார்