2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவும் இலங்கையும் மோதிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 274 ரன்களை அடித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், தோனியை கவுரவிக்கும் வகையில் தோனி சிக்ஸர் அடித்த பந்து விழுந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க செயலாளர் அஜிங்ஜ்யா நாயக், “தோனி வின்னிங் ஷாட் அடித்த பந்து விழுந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும். உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை வழிநடத்திய தோனிக்கு செய்யக்கூடிய சரியான கவுரமாக இது அமையும். அவரது வழியை பல இளைஞர்களும் பின்பற்றுவதற்கு இந்த நினைவிடம் தூண்டுகோலாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் அடித்த சிக்ஸ்க்காக நினைவிடம் எழுப்புவது இதுவே முதன்முறை. இந்த நினைவிடத்தை தோனியின் கையாலேயே திறக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.