இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி இன்று புதிய சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்நிலையில், தோனி நீண்ட நாட்களாக எட்டிவிடுவாரா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10 ஆயிரம் ரன்களை, இன்றைய போட்டியில் கடந்து சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மெனாக களமிறங்கிய தோனி, காலப்போக்கில் தனது பேட்டிங் நிலையை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டார். இதனால், மளமளவென குவிந்த அவரது ரன் டேபிளில் தேக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், வெறும் 33 ரன்கள் மட்டுமே அடித்தால், இந்திய அளவில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது வீரர் மற்றும் உலகளவில் 12ஆவது வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கங்குலி, டிராவிட் ஆகியோரும், தோனிக்கு அடுத்து 9,588 ரன்களுடன் இந்த சாதனையை ஐந்தாவது நபராக கடக்க காத்திருக்கிறார். ஒருவேளை தோனி இந்த சாதனையை இன்று முறியடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் வலுத்துள்ளது. ஆனால், அதற்கு அவரது பேட்டிங் நிலையும் ஒத்துழைக்க வேண்டும்.