நடக்கவிருக்கும் டி20 தொடர்களில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் அந்த அணிக்கு எதிராக இந்தியா களமிறங்குகிறது. இந்தத் தொடரில் கேப்டன் கோலி மற்றும் தோனிக்கு ஓய்வு வழங்கி அறிவித்தது பிசிசிஐ. இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, இரண்டாவது விக்கெட் கீப்பரை அடையாளம் காண்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்ததாக பிசிசிஐ விளக்கமளித்தது.
இந்நிலையில், ஒருநாள் தொடர் முடிந்து வெற்றிக் களிப்பில் இருந்த விராட் கோலியிடம், தோனியின் நீக்கம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த கோலி, “இதுபற்றி அணியின் தேர்வாளர்கள் போதுமான அளவிற்கு விளக்கமளித்துவிட்டனர் என்று நினைக்கிறேன். அவர்கள் தோனியுடன் பேசிவிட்டுதான் இதை அறிவித்திருப்பார்கள். அதனால் நான் ஏன் இதை விளக்கவேண்டும் என்று புரியவில்லை. மக்கள் இந்த விஷயத்தை பல்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். ஆனால், தேர்வாளர்களின் விளக்கம்தான் உண்மையானதும், முதன்மையானதும். இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் ஒருங்கிணைப்பிலும், கட்டமைப்பிலும் தோனியின் பங்கு மிகமுக்கியமானது. ஆனால், டி20 போன்ற மிகச்சிறிய ஃபார்மேட்டுகளில் ரிஷப் பாண்ட் போன்ற இளம்வீரர்களைக் கொண்டுவர வேண்டும் என்று தோனியேதான் நினைக்கிறார்” என தெரிவித்துள்ளார்.