காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
21ஆவது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளின் நான்காவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, நடப்பு சாம்பியன் சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்திய அணியின் சார்பில் மாணிக பத்ரா - மவுமா தாஸ் இணையும், சிங்கப்பூர் அணியின் சார்பில் யிகான் ஜோவு - மேங்யூ யூ இணையும் களமிறங்கினர்.
முதல் இரண்டு சுற்றுகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு சுற்றுகளில் இந்திய அணியின் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதன்மூலம், இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, சிங்கப்பூர் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இந்திய அணி காமன்வெல்த் போட்டியில் வெல்லும் ஏழாவது தங்கப்பதக்கம் இதுவாகும். அதேபோல், மல்டி-ஸ்போர்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் தங்கம் இதுவாகும்.
தற்போதைய நிலையில், இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்திய அணிக்கு மேலும், ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 7 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.