11வது ஐ.பி.எல் போட்டியில் புனேவில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 204 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை சேர்த்து 106 ரன்களை எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். அது மட்டுமல்லாமல் ஐ.பி.எலில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். சென்னை அணியில் வாட்சனுக்கு அடுத்து ரெய்னா 9 பௌண்டரிகளுடன் 29 பந்துகளுக்கு 46 ரன்கள் விளாசினார். அதன்பின் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டும், பென் லௌகிஹிலின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அதன்பின் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கமே சற்று தடுமாற்றத்துடன் தனது பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீரர்களான ரஹானே 16 ரன்களும், ஹென்றிச் கிளாசான் 7 ரன்களும் மட்டுமே எடுத்து வெளியேறினர். அதன்பின் இறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் பந்தில், வீசகரண் சர்மா கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் . ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி 18.3 ஓவருக்கு 140 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தரவரிசைப் பட்டியலில் மூன்று வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி சார்பாக ப்ரவோ, தாகூர், கரண் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது ஷேன் வாட்சனுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆட்டத்தின் வெற்றியோடு ஒரு சாதனையும் படைத்துள்ளது சென்னை அணி. இதுவரை நடந்த ஐ.பி.எல் போட்டிகளிலேயே அதிவேக 150 ரன்களை அடைந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 13 ஓவர்களில் 150 ரன்களை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.