துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், 25-ஆம் தேதி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஒருபுறம் சரமாரியாக விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொருபுறம் ஓப்பனிங் வீரர் முகமது ஷேஷாத் எதையும் பொருட்படுத்தாமல் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தார்.
அச்சமயம், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வை பந்துவீச தோனி அழைத்தார். பந்துவீச வந்த குல்தீப் ஃபீல்டர்களை மாற்றுமாறு தோனியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு தோனி மறுத்ததால், மீண்டும் ஃபீல்டரை மாற்றவேண்டும் என்று கேட்டார். இம்முறை குல்தீப் மீது கோபமடைந்த தோனி, “நீ பந்துவீசப் போகிறாயா அல்லது வேறு ஒரு பவுலருக்கு நான் வாய்ப்பளிக்கட்டுமா” என காட்டமாக கேட்டார். இதனால், வேறு வழியின்றி குல்தீப் பந்துவீச தயாரானார்.
களத்தில் தன் கூலான செயல்பாடுகளால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படுபவர் தோனி. ஆனால், அது சில சமயங்களில் நிலைத்ததில்லை. இதற்கு முன்னர் ஒருமுறை தோனி கோபமடைந்தது குறித்து பேசிய குல்தீப், “இந்தூர் மைதானத்தில் இந்தியா இலங்கை இடையே டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 260 ரன்களைப் பதிவு செய்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தவறாக அடிக்கப்பட்ட ஷாட்கள் கூட சிக்ஸர்களாக பறக்க, கடுப்பான தோனி என்னை அழைத்து பீல்டிங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறு சொன்னார். ஆனால், குழப்பத்திலிருந்த நான் அதை ஏற்க மறுத்தேன். கோபமடைந்த தோனி, ‘நான் என்ன முட்டாளா? இதற்கு முன் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்’ எனச்சொல்ல பதறிப்போய் அவர் பேச்சைக் கேட்டேன். அதற்கு பலனாக விக்கெட்டும் வீழ்ந்தது. அப்போது என்னிடம் வந்த தோனி, இதைத்தான் செய்யச் சொன்னேன் என சொல்லிவிட்டுச் சென்றார்” என தெரிவித்திருந்தார்.
"Bowling karega ya bowler change karein" MS Dhoni to Kuldeep Yadav pic.twitter.com/Sb7mKOporI
— Khurram Siddiquee (@iamkhurrum12) September 25, 2018
தற்போது மீண்டும் தோனியின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் குல்தீப்.