2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்த போட்டிகள் இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்றது. அந்த வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது. இந்திய அணி விளையாடும் போட்டிகளைத் துபாயில் நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அச்சமயத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட உள்ளதாகக் கூறப்பட்டது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த வருடம் பாகிஸ்தானில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.