13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை குவித்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்களும், அணியின் கேப்டன் தோனி 36 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர்.
சென்னை அணியின் கேப்டனான தோனி, அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல இறுதிக்கட்டம் வரை கடுமையாக போராடினார். மேலும், போட்டியின் இறுதி கட்டத்தில் உடல்நலக் குறைவால் அவர் தடுமாறுவது தெரிந்தது. இந்நிலையில், தோனி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "இங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது. தொண்டை எளிதில் வறண்டு விடுகிறது. அதனால், இருமல் அடிக்கடி ஏற்பட்டது. என்னால் நிறைய பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை. மைதானம் மந்தமாக இருக்கும்போது நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியம். நீண்ட காலத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறோம். நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது" எனக் கூறினார்.