13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 29-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரின் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
சென்னை அணி தரப்பில் வாட்சன் அதிகபட்சமாக 38 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நடப்பு ஐ.பி.எல் தொடரில், இது சென்னை அணிக்கு கிடைத்த மூன்றாவது வெற்றியாகும். போட்டியின் முடிவில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய சாம் கரனை வெகுவாகப் பாராட்டினார்.
அதில், "நிறைய விஷயங்கள் வேகப்பந்து வீச்சாளர்களைச் சார்ந்தே இருந்தது. களத்தில் முனைப்போடு இருக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டேன். எங்களது திட்டத்தைக் களத்தில் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். முன்வரிசையில் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், சாம் கரனை முன்கூட்டியே இறக்க முடிவெடுத்தோம். சாம்கரன் முழுமையான கிரிக்கெட் வீரர். சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்க்கொண்டு விளையாடினார். அவரால் 15 முதல் 45 ரன்கள் வரை அணிக்கு பங்களிக்க முடியும்" எனக் கூறினார்.