அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடரில், இளம் வீரர்கள் பலரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களுள் பெங்களூரு அணிக்காக விளையாடிய 20 வயது நிரம்பிய இளம் வீரரான தேவ்தத் படிக்கல் மிக முக்கியமானவர். நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல், 5 அரை சதங்களுடன் 473 ரன்கள் குவித்தார். மேலும், அறிமுகமான ஐபிஎல் தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார். இந்நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் உடனான தன்னுடைய அனுபவம் குறித்து தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
அதில் அவர், "டிவில்லியர்ஸ் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதே நம் கண்களுக்கு விருந்துதான். இப்போது என்ன செய்கிறோனோ அதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என தொடர் முழுவதும் அறிவுறுத்தி வந்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் குவித்திருந்தேன். அந்த போட்டிக்குப் பிறகு எனக்கு டிவில்லியர்ஸ் மெசேஜ் செய்திருந்தார். அதில், நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதை செய்யுங்கள், அனுபவித்து விளையாடுங்கள் என அதில் இருந்தது. அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு என்பது எனக்கு கிடைத்த சிறந்த மரியாதை" எனக் கூறினார்.