உலக கோப்பை 2023 இன் முதல் திருப்புமுனையாக நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
உலக கோப்பையின் 13 வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ஜத்ரன் சிறப்பான துவக்கம் தந்தனர். ஜத்ரன் நிதானமாக ஆட, அதிரடி காட்டிய குர்பாஸ் அரை சதம் கடந்தார். ஜத்ரன் 28 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரஹ்மத்தும் மூன்று ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய குர்பாஸ் 80 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்து வந்த சகிதி, அஜ்மத்துல்லா, நபி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அலிகில்லின் அரைசதம் (58) மற்றும் முஜீப்பின் 28 ரன்கள் கை கொடுக்க, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரசித் 3 விக்கெட்டுகள் எடுத்தார். வுட் 2 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன், டாப்லி, ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ரூட்டும் 11 ரன்களில் முஜிப்பின் சுழலில் வீழ்ந்தார். ஓரளவு நிதானமாக ஆடிய மாலன் 32 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த கேப்டன் பட்லர் 9 ரன்களிலும், அதிரடி வீரர்கள் லிவிங்ஸ்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் புரூக் மட்டும் அரை சதம் கடந்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் கைகொடுக்க தவற, பொறுமை இழந்த புரூக்கும் 66 ரன்களில் முஜீப் பந்தில் ஆட்டமிழந்தார். முஜீப், ரஷீத் கான், நபி என மூவேந்தர் சுழல் கூட்டணியில் இங்கிலாந்து அணி சுழற்றி அடிக்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கட்டுகளும், நபி 2 விக்கெட்டுகளும், ஃபரூக்கி மற்றும் நவீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகள் எடுத்த முஜிபுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீச தேர்ந்தெடுத்ததே அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுவான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதை கணக்கில் கொள்ளாமல், முதலில் பந்துவீச தேர்ந்தெடுத்தது, இங்கிலாந்தின் தவறான முடிவாகிவிட்டது. இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறுவார்கள் என்று தெரிந்தும், முதலில் பந்து வீச தீர்மானித்தது தவறான முடிவாகிவிட்டது என்றும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஆன அனில் கும்ப்ளே, பாகிஸ்தான் அணி உடனான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது டெல்லி பெரோசா கோட்லா மைதானம் என்று முன்பு அழைக்கப்பட்ட, தற்போது அருண் ஜெட்லி மைதானம் என்று அழைக்கப்படும், இதே மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெ.அருண்குமார்