Skip to main content

மேல ஏறி வர்றோம்; நெஞ்சை நிமிர்த்தும் ஆப்கானிஸ்தான்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Afghanistan netherlands cricket score update worldcup

 

உலகக்கோப்பையின் 34ஆவது லீக் ஆட்டம் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே லக்னோவின் பாரத ரத்னா ஶ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

 

அதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பர்ரேசி 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஆக்கர் மேன் மேக்ஸ் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆக்கர் மேன் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ் 42 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த சைப்ரண்ட் மட்டும் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்து, அவரும் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் எட்வர்ஸும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  நெதர்லாந்து வீரர்களில் நான்கு பேர் அடுத்தடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய நபி 3 விக்கெட்டுகளையும், அகமத் 2 விக்கெட்டுகளையும், முஜீப் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 10 கண்களிலும் இப்ராஹிம் 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் சகிதி இணை பொறுப்பாக ஆடியது. நிதானமாக ஆடி அரை சதம் கடந்த ரஹ்மத்ஷா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சஹிதி, அஸ்மத்துல்லா இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய கேப்டன் சஹிதி 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு துணை நின்ற அஸ்மத்துல்லா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து அணி சார்பில் வேன் பீக், வேன் டெர் மெர்வ், சகிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகள் எடுத்து, புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய நபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி செய்ய மைதானங்கள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரையிறுதியில் மீதமுள்ள மூன்று இடத்திற்கு ஐந்து அணிகளிடையே கடும் போட்டி நிலவுவது, இந்த உலக கோப்பையை மேலும் சுவாரசியமாக்கி உள்ளது.

- வெ.அருண்குமார்