ஐபிஎல் 2024இன் 65ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த அபார வெற்றி மூலம், பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனையடுத்து, முதல் தகுதி சுற்று போட்டி நேற்று (21-05-24) நடைபெற்றது. இதில், ஹைதராபாத் அணியை தோற்கடித்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (22-05-24) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கும், பெங்களூர் அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி, அடுத்ததாக ஹைதராபாத் அணியோடு மோதவிருக்கிறது.
இத்தகைய சூழலில், பெங்களூர் அணி வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த பயிற்சியை பெங்களூர் அணி ரத்து செய்துள்ளது. மேலும், இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 20ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.