நடப்பு ஐபிஎல் சீசனின் 33 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின் வர்ணனையாளரான ரவி சாஸ்திரியுடனான உரையாடலில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “நாங்களும் பந்துவீச்சினைத் தான் தேர்வு செய்ய இருந்தோம். வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துள்ளார்கள். ஐபிஎல் தொடர் என்பது நீண்ட தொடர். கற்றுக்கொள்ளும் விஷயங்களை தேவையான தருணங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், ஒரு போட்டியில் அனைவரது பங்களிப்பும் இருப்பதே முக்கியமான ஒன்று. சிறந்த கேட்ச், சிறந்த ரன் அவுட், மிடில் ஓவர்களில் சிறப்பாக ஒரு ஓவரை வீசுவது என்பது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
நான் கொல்கத்தாவில் நிறையவே விளையாடியுள்ளேன். ஆனால் நான் அதிகம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் U16 அல்லது U19 போன்ற போட்டிகளில் விளையாடவில்லை. தொடக்கத்தில் நான் பணி செய்த கரக்பூருக்கு இங்கிருந்து 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். நான் அங்கு அதிகமான நேரம் செலவிட்டேன். நான் அங்கு அதிகமான கிரிக்கெட்டும் அதேபோல் கால்பந்தையும் விளையாடியுள்ளேன். அதனால் அந்த பந்தம் அங்கிருந்து வருகிறது என நினைக்கிறேன்” எனக் கூறினார்.