உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியையும், இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்களையும் ஒப்பிட்டு ஹர்பஜன் சிங் கருத்து வெளியிட்டுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்தாட்ட திருவிழா ரஷ்யாவில் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. 32 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் பிரேசில், அர்ஜெண்டினா, நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்ளிட்ட பலமான அணிகள் அனைத்தும் வெளியேறின. பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் நேற்று இறுதிப்போட்டியில் மோதின.
மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், பிரான்ஸ் அணி 4 - 2 என்ற கோல்க்கணக்கில் குரோஷியா அணியை வெற்றிபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் பிரான்ஸ் வீரர்களும், ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். முதன்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற குரோஷியா அணிக்கும் பலதரப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘வெறும் 50 லட்சம் மக்கள்தொகையே கொண்ட குரோஷியா, உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 135 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாம் இந்து - முஸ்லீம் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.